ஹாங்காங்: உலகப் புகழ் பெற்ற வைரங்களில் ஒன்றான மார்ஷியன் பிங்க் வைரம் ரூ. 95 கோடிக்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளது.
ஹாங்காங்கில் நடந்த ஏலத்தில் இந்த வைரம் ரூ. 95,44,87,926க்கு ஏலம் போனது. எதிர்பார்க்கப்பட்ட விலையை விட இது சில மடங்கு கூடுதலாகும். கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த வைரம் முதல் முறையாக விற்பனைக்கு வந்தது. 1976ம் ஆண்டு ஹாரி வின்ஸ்டன்தான் முதலில் இதை விற்றார். செவ்வாய் கிரகத்திற்கு அமெரிக்கா விண்கலத்தை அனுப்பியதை கெளரவிக்கும் வகையில் இந்த பிங்க் நிற வைரத்துக்கு மார்ஷியன் என பெயர் சூட்டப்பட்டது. உலக அளவில் மிகப் பெரிய பிங்க் நிற வைரம் இதுதான்.
இந்த வைரம் ஹாங்காங்கில் ஏலத்திற்கு வந்தபோது பலரையும் இது ஈர்த்தது. ஏலத்தில் இதன் தொகை உயர்ந்து கொண்டே போய் கடைசியில் ரூ. 95 கோடிக்கு இது எடுக்கப்பட்டது. இதை ஏலத்தில் எடுத்தவரின் பெயர், விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த ஏலமே மொத்தம் 10 நிமிடங்கள்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் ஏலத்திற்குப் பெயர் போன நகரங்கள் நியூயார்க்கும், லண்டனும்தான். தற்போது ஹாங்காங்கும் அதற்கு இணையாக வளர்ந்து வருவதை இந்த ஏலம் நிரூபித்துள்ளது.
No comments:
Post a Comment