Tuesday, May 8, 2012

விழிக்க வேண்டிய தேசமும் ஒழிக்க வேண்டிய பிளாஸ்டிக்கும்

சமீபத்தில் ஸ்பெயின் நாட்டு கடற்கரை ஒன்றில் 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட மிகப்பெரிய திமிங்கலம் கரை ஒதுங்கியது. உயிருடன் இருந்த அந்த திமிங்கலத்தை மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்புவதற்காக புதிய கால்வாய் ஒன்றும் வெட்டப்பட்டது. ஆனால், முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து திமிங்கலம் இறந்துவிட்டது. பின்னர் இறந்த அந்த திமிங்கலத்தின் உடலைப் பரிசோதித்துப் பார்த்தபோது அதன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதன் குடலில் சுமார் 50 கிலோ எடை அளவுக்கு பிளாஸ்டிக் பைகளும், கை உறைகளும் காணப்பட்டது.


இதனால் அந்த திமிங்கலம் கடலில் நீந்த முடியாமலும் கடல் அலையில் எதிர்த்துச் செல்ல முடியாமலும் பலவீனமாகி இறந்து போனது. நாம் வீசி எறியும் பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் பூமியில் உள்ள விலங்குகளை மட்டுமன்றி, கடலில் உள்ள உயிரினங்களையும் பாதிக்கின்றன.
பிளாஸ்டிக் அதிக அளவு பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளிவரும் கழிவுப்பொருள்களால் சுற்றுச்சூழல் அதிக அளவு மாசு அடைகிறது. புவி வெப்பம் அடைகிறது. பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.

மனித சமூகத்தால் அன்றாடம் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், கார்பன்-மோனோ-ஆக்சைடு, கந்தக-டை-ஆக்சைடு போன்றவைகள் வளிமண்டலத்தை அதிக அளவு மாசுபடுத்துகிறது. இதற்கு பிளாஸ்டிக் சார்ந்த கழிவுப் பொருள்களும் குப்பைகளும் ஒரு காரணமாக அமைகின்றன.

இந்த நச்சு வாயுக்கள் ஓசோன் படலத்தைப் பாதிப்பதால் புவி வெப்பம் அடைந்து எதிர்காலத்தில் பனிமலைகள் உருகி கடற்கரை ஓர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இப்பொழுது புவி வெப்பம் அடைவதால் நமது எதிர்கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருள்களையும், பிளாஸ்டிக் கைப்பைகளையும், பிளாஸ்டிக் உறைகளையும் மக்கள் எளிதாகக் கையாள்கின்றனர். சென்னையில் ஒருநாளில் மட்டும் வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் குப்பை பொருள்களின் அளவு 1.86 லட்சம் கிலோவாகும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் தினமும் வெளியேற்றப்படும் அல்லது பொதுமக்களால் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களின் அளவு நாள் ஒன்றுக்கு 200 டன் முதல் 250 டன் வரை என்பதைக் கேட்கும்போது நெஞ்சு வெடிக்கிறது.

ஒரு பிளாஸ்டிக் பொருள் மக்குவதற்கு ஆகும் காலம் 100 ஆண்டு முதல் 1,000 ஆண்டு வரை ஆகும். ஒரு பிளாஸ்டிக் பையானது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், அவை மக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள். கடலில் மிதக்கும் மக்காத களைகள், கழிவுப்பொருள்களில் 90 சதவிகிதம் பிளாஸ்டிக் சார்ந்த பொருள்களாக உள்ளன.

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களை மீன்கள் உணவாக உட்கொள்ளும். அந்த மீனை மனிதன் உணவாக உண்ணும்போது மனிதனுக்கு மீனின் மூலம் பல்வேறுபட்ட நோய்கள் வருவதாக ஓர் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் 7 சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சி மூலம் திரும்பப் பயன்படுத்த முடியும் தன்மையுடையதாக உள்ளது.
வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 25 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துகிறார். இந்தியாவில் ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 5.2 கிலோ பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதாக இந்திய பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்க நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 250 கோடி பிளாஸ்டிக் பாட்டில்கள் உபயோகிக்கப்படுகிறது. உலக அளவில் ஆண்டுக்கு 30 லட்சம் டன் எடையுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் அதிகபட்சம் பூமியில் வீசி எறியப்படுகிறது. இதனால் மண் அதிக அளவு மாசு அடைகிறது. பிளாஸ்டிக் பொருள்களிலிருந்து வெளியாகும் பிஸ்பீனால் - ஏ என்ற அமிலம் மனிதனின் மூளையின் செயல்பாடுகளையும் மனநிலையையும் பாதிக்கச் செய்யும் தன்மை கொண்டவை.
ஜம்மு காஷ்மீர், சிக்கிம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்துள்ளன. ஹிமாசலப் பிரதேச மாநிலத்தின் அமைச்சரவை அந்த மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலம் எச்.பி. முறையில் சிதைவடையாத பிளாஸ்டிக் பொருள்களைக் கழிவுக் கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன்கீழ் 15-8-2009 முதல் தடை செய்துள்ளது. இதனைப் பின்பற்றி மற்ற மாநிலங்களும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வகையில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்ய முன்வர வேண்டும்.

வீட்டு உபயோகப் பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், அழகுசாதனப் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், தகவல் தொழில்நுட்ப பொருள்கள், தொலைதொடர்புச் சாதன பொருள்கள், கணினி பாகங்கள் போன்றவை அதிக அளவு பிளாஸ்டிக் பொருள்களால் தயாரிக்கப்படுகின்றன.

இப்பொழுது பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டு வரும் வேளையில் பிளாஸ்டிக்குக்கு எதிரான போராட்டங்களும், எதிர்ப்புகளும், தடைகளும் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் வல்லுநர்களும், இயற்கை ஆர்வலர்களும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளையும், தீமைகளையும், பாதிப்புகளையும் மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இவை ஒருபுறம் நடந்தாலும் அன்றாடம் நாம் தொழிற்சாலைகளில், வீடுகளில், வணிக வளாகங்களில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக் குப்பைகளை முற்றிலும் ஒழிப்பதற்குத் தேவையான சட்டங்களையும் திட்டங்களையும் அரசு உருவாக்கி தீவிரப்படுத்தாமல் உள்ளது மிகவும் வேதனையாகவே உள்ளது.

பிளாஸ்டிக் பொருள்களை பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்ந்து நடைபெற்றால் எதிர்காலத்தில் நமது தேசமே பிளாஸ்டிக் குப்பைமேட்டில் தான் அமைந்திருக்கும் நிலைமை ஏற்படும். இதனைத் தடுக்கும் வகையில் அரசு பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களைத் தயாரிக்க ஆய்வு மேற்கொள்ள முன்வர வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக மரபு பொறியியல் மூலம் உயிர் மறுசுழற்சி பிளாஸ்டிக் கண்டுபிடிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

உயிர் மறுசுழற்சி மூலம் பிளாஸ்டிக் மாற்றுப் பொருளாகத் தயாரிக்கப்படும் ""ப்யோபால்'' என்ற மாற்றுப் பொருளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அரசு வரிச்சலுகை, இலவச இடம், இலவச மின்சாரம் அல்லது சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் வழங்கி ஊக்கமளிக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் ஸ்டார்ச் மற்றும் பாலி லாக்டிக் ஆசிட் என்ற இயற்கையான பொருள்களைக் கொண்டு தீங்கு விளைவிக்காத பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளித்து உதவி செய்து வருகின்றன. இதேபோன்று நமது நாட்டிலும் அரசு உதவி செய்ய முன்வர வேண்டும்.

பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை அரசே நடத்தி வணிக ரீதியாக உற்பத்தி செய்து பழைய பிளாஸ்டிக் பொருள்களையும் குப்பைகளையும் நல்ல விலை கொடுத்துத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை அரசே அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து மறுசுழற்சி மூலம் மாற்றுப் பொருள்கள் தயாரித்து விநியோகம் செய்ய வேண்டும்.

இந்திய நாட்டின் போக்குவரத்தில் 80 சதவிகிதம் சாலைப் போக்குவரத்து ஆகும். இந்தச் சாலைகளின் மேம்பாட்டுப் பணிகளில் பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களைப் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். குறிப்பாக, சாலைப்பணிகளில் தார் பொருள்களுக்கு மாற்றாக பிளாஸ்டிக் கழிவுப்பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.
ரொட்டி உறை, மிட்டாய் உறை, சாக்லெட் உறை, பேனாக்கள், எண்ணெய் பொருள்கள், கயிறுகள், டப்பாக்கள், டின்கள், மசாலை பொருள்கள், உறைகள், விளம்பரப் பதாகைகள் போன்றவை பிளாஸ்டிக்கினால் தயாரிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டு அட்டை, அலுமினியப் பொருள்களால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ. 100-க்கும் மேல் மதிப்பு உள்ள பிளாஸ்டிக் பொருள்களை மட்டுமே வணிக நோக்கில் தயாரிக்க அனைத்து நிறுவனங்களும் முன்வர வேண்டும். உணவு நிறுவனங்கள், உணவகங்கள், பிளாஸ்டிக் உறைகளைத் தவிர்த்து அட்டை, அலுமினிய, சணல் பைகளையும் வாழை இலை முதலியவற்றையும் கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தீர்மானம் நிறைவேற்றி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து கண்ணாடி பாட்டில்கள், உலோக பாட்டில்கள், தகர அலுமினிய பாட்டில்களைப் பயன்படுத்த நிறுவனங்களும் பொதுமக்களும் முன்வர வேண்டும்.

விழிப்புணர்வுக் கூட்டம், கருத்தரங்கு, போராட்டத்தினால் மட்டுமே பிளாஸ்டிக் குப்பைகளை ஒழித்துவிட முடியாது. அரசு கடுமையான சட்டம் இயற்றுவதன் மூலமும் பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு மூலமும் மட்டுமே பிளாஸ்டிக் பொருள்களையும் பிளாஸ்டிக் சார்ந்த குப்பைகளையும் நமது தேசம் முழுவதும் ஒழிக்க முடியும். மாசு இல்லாத தேசமாக உலக நாடுகளுக்கு முன்னோடியாக விழித்த தேசமாய் எழுந்து நிற்போம்.

No comments:

Post a Comment

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes