Friday, December 9, 2011

Steve Jobs History in Tamil


                                                         Steve Jobs


தனியொரு மனிதனின் மரணம் உலக மக்கள் அனைவருக்கும் துக்கமாக மாறுகிறது என்றால், அந்த மனிதரால் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பயன் அடைந்திருந்தாலொழிய அது சாத்தியமில்லை. இந்த வரிசையில் தற்போது இடம்பெற்றிருப்பவர் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ். தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அனைவரும், அவரை முழுமையாகப் புரிந்திருந்தாலும் புரிந்திராவிட்டாலும், அவரது மரணத்தால் வருத்தமடைந்ததைக் கடந்த இரு நாள்களில் காண முடிந்தது.

ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டவர். ஆறு மாதத்திலேயே இந்தப் படிப்பு பயன்தராது என்று கல்லூரியைவிட்டு வெளியேறியவர். அவர் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைச் செய்ததில்லை. ஆனால், மற்றவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை, சாதாரணமான, அறிவியல் பரிச்சயம் இல்லாதவரும் கண்ணை மூடிக்கொண்டு பயன்படுத்தும்படி செய்தவர். தொழில்நுட்பத்துக்குள் அறிவியலை வசீகரத்துடன் நுழையச் செய்தவர்.

இவருக்கு இணையாகச் சந்தையில் இருந்த நிறுவனங்களும் அறிவியல் கண்டுபிடிப்புகளை இதே மறுஆக்கம் செய்துகொண்டிருந்தன. ஆனாலும், ஜாப்ஸ் அறிமுகம் செய்தவை நுகர்வோருக்கு எளிமையாக இருந்ததால், மற்றவர்கள் அவரைப் பின்பற்ற வேண்டியிருந்தது. அதனால்தான் உலகம் இன்று அவருக்குப் புகழஞ்சலி செலுத்துகிறது.

இவர் அறிமுகப்படுத்திய ஐ-பாட் வாங்குவதற்கு முந்நாள் இரவே வந்து படுத்துக்கிடந்தனர் வாடிக்கையாளர்கள். தொடுதிரை வசதியுடன் அடுத்து இவர் அறிமுகம் செய்த ஐ-போன் வாங்குவதற்கும் இதேபோன்று வரிசையில் நின்று காத்திருந்தார்கள். கணினியை கையளவுக்கு மாற்றி, இவர் ஐ-பேட் அறிமுகம் செய்தபோதும் இவரது புதுமைக்கு வரவேற்பு இருந்தது.
இவர் இயற்கை எய்திய அதே நாளில் இந்தியாவிலும் ஆகாஷ் என்கின்ற ஐ-பேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,750 மட்டுமே. ஆனால், இதன் பயன்பாட்டு எல்லை குறுகியது. எனினும், ஊரகப் பகுதிகளை உலகத்தோடு இணைக்கப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதற்கெல்லாம் ஆதாரச் சுருதியாக இருந்தவர் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தின் "தாரக மந்திரம்' என்ன தெரியுமா? "மாத்தி யோசி' (பட்ண்ய்ந் ஈண்ச்ச்ங்ழ்ங்ய்ற்) என்பதுதான். அதுதான் முழுக்க முழுக்க ஸ்டீவ் ஜாப்சுடைய வாழ்க்கைத் தத்துவம் என்றாலும் தவறில்லை.

"மூன்று ஆப்பிள்கள் முக்கியமானவை. முதல் ஆப்பிள் ஏவாள் உண்டது. இரண்டாவது ஆப்பிள் நியூட்டனின் சிந்தனையைத் தட்டியது. மூன்றாவது ஆப்பிள் மனித சமூகம் அனைத்தையும் வசீகரித்தது' என்று டிவிட்டரில் பேசப்படுகிறது. ஐ-சேட்  என்று சோகத்தைத் தலைப்பிடுகிறது ஓர் ஆங்கில நாளேடு. ஐ-போன் தொடுதிரையை நோக்கி தேவதூதனின் விரல் நீளுவதாக ஒரு கார்ட்டூன், இறையழைப்பைப் பேசுகிறது. கடந்த இரு நாள்களாக தகவல் தொழில்நுட்ப உலகில் ஜாப்ஸ் பற்றிய பேச்சு ஓய்ந்தபாடில்லை. அதுதான் அவரது பெருமை.

இவரது புதுமைகள் யாவுமே இவரது மனதில் கனவாக இருந்து உருவம் பெற்றவைதான். ஒரு கட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலக நேரிட்டபோதும், என்னிடம் ஐந்து பெரும் புதுமைப் படைப்புகள் இருக்கின்றன என்று தன்னைப் பேட்டி கண்ட நிருபரிடம் அவரால் சொல்ல முடிந்திருக்கிறது என்றால், அவரது கனவுகள் எந்த அளவுக்கு மனதுக்குள் இயல்வடிவம் கொண்டிருந்தன என்பதைக் காணலாம்.

வாழ்க்கையை அதன்போக்கில் எதிர்கொண்டவர். ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியே வந்த பின்னர், தனியே நெக்ஸ்ட் என்ற கணினி நிறுவனத்தைத் தொடங்கினார். பிக்ஸல் என்ற சித்திரத் திரைப்படத் தயாரிப்புக்கு உதவும் ஸ்டூடியோவை விலைக்கு வாங்கி, பின்னாளில் பிக்ஸல் நிறுவனத்தை வால்ட் டிஸ்ட்னி நிறுவனத்துக்குக் கொடுத்ததன் மூலம் அந்நிறுவனத்தின் மிக அதிகமான பங்குகளைத் தனதாக்கிக் கொண்டவர் ஜாப்ஸ். மீண்டும் ஆப்பிள் நிறுவனத்துக்கு வந்து, சரிவில் இருந்த நிறுவனத்தை நிமிர்த்திக் காட்டியவர்.

கார்களை நடுத்தர வர்க்கத்தினராலும் வாங்க முடியும் என்ற நிலையை அமெரிக்காவில் உருவாக்கியவர் ஹென்றி ஃபோர்டு என்றால் தகவல் தொழில்நுட்பத்தை ஒவ்வோர் அமெரிக்கரின் உள்ளங்கையிலும் சேர்த்த பெருமைக்கு உரியவர் என்பதால் அவருக்கு இணையாகப் பேசப்படுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ். 2005-ம் ஆண்டு வரையிலும்கூட, ஆப்பிள் நிறுவனத்தின் பங்குவிலை 50 டாலராகத்தான் இருந்தது. ஐ-பாட், ஐ-போன் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் மளமளவென உயரத் தொடங்கிய பங்கு மதிப்பு, கடந்த ஆகஸ்ட் மாதம் 364 டாலராக உயர்ந்தது என்பதுதான், இவரது தொழில்நுட்ப சாமர்த்தியத்தின் வெற்றி!

இவர் சம்பாதித்ததும் சாதித்ததும்போல நாளைய உலகில் இன்னொருவர் சாதிக்கக் கூடும். வெற்றியடையவும் கூடும். இவரைப்போலவே அடிமட்டத்திலிருந்து யாரோ ஒருவர் மிக உயரத்துக்கு வருவார். ஆனால், ஸ்டீவ் ஜாப்ஸ் மீது நமக்கு ஏற்படும் நெருக்கம் என்பது இந்திய மரபு ஞானத்தால் வந்த பிணைப்பு.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஸ்டீவ் ஜாப்ஸ், "மரணம் ஒன்றுதான் வாழ்வின் நிச்சயம்' என்பதை உணர்ந்தவர். "நான் விரைவில் இறந்துவிடுவேன் என்பதுதான் வாழ்க்கையின் முக்கிய தேர்வுகளைச் செய்ய எனக்கு உதவிய அதிமுக்கிய கருவி' என்று அவரால் சொல்ல முடிந்திருக்கிறது.

"அடுத்தவர் கருத்து, கொள்கைகளில் சிக்கிக் கொள்ளாதே, உன் உள்மனக்குரல் அடுத்தவர்களின் கருத்தோசையில் மூழ்கடிக்கப்படும்படியாக விட்டுவிடாதே. முக்கியமாக, உன் மனதையும் உள்ளுணர்வையும் பின்தொடர்ந்து செல்ல தைரியம் கொள். அவற்றுக்குத் தெரியும்- நீ என்னவாகப் போகிறாய் என்பது!' என்று மரணம் மிக அருகில் என்று தெரிந்த நிலையிலும் அவரால் குறிப்பிட முடிந்திருக்கிறது.

அவர் பெற்றிருந்த இந்திய மரபு ஞானம்தான் அவரது மிகப்பெரும் சொத்து, ஆற்றல், அறிவு, எல்லாமும். அவர் சார்ந்திருந்த புத்த மதம்தான் இந்த ஞானத்துக்குக் காரணம். ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு விஞ்ஞானியல்ல, ஞானி!

4 comments:

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes