Showing posts with label வாழ்க்கை வரலாறு. Show all posts
Showing posts with label வாழ்க்கை வரலாறு. Show all posts

Friday, December 9, 2011

டாக்டர் அம்பேதகர் வாழ்க்கை வரலாறு

பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர்

பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார். தந்தையின் பணிக்காலம் சில வருடங்களிலேயே முடிந்துவிட இளமை வறுமையை கைகளில் திணித்தது. ஓய்வூதியத்தின் வெளிச்சத்தில் அவருடைய கல்வி ஆரம்பமானது.

 சிறுவயதில் ஆனந்தமாய் விளையாடிய அவர் தன்னுடைய பள்ளிக் காலத்தில் தான் தானும் தன்னுடைய குடும்பமும் மற்றவர்களை விட வித்தியாசமாக நடத்தப்படுவதை அறிந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் தான் பிறந்திருக்கிறோம் என்பதும், இந்தியாவின் சாதீய அமைப்பு தன்னை இழிவாக நடத்துகிறது என்பதும் சிறுவனுக்கு தெரிந்திருக்கவில்லை. பள்ளியில் தனிக்குவளையில் தண்ணீர், மாட்டு வண்டியில் கூட சமமாய் அமர்ந்து வர இயலாமை என தீண்டாமையின் கொடுமைகள் அவருடைய மனதைச் சுட்டன.பள்ளிக்கூடத்தில் மற்ற மாணவர்களைப் போல அவரால் நடமாட முடியவில்லை. ஓரமாக அமர்த்தப்பட்டார். கரும்பலகையில் மற்ற மாணவர்களைப் போல எதுவும் எழுத அவர் அனுமதிக்கப்படவில்லை. சமஸ்கிருதம் கற்கவேண்டும் என்னும் ஆர்வம் எழுந்தபோது, அது புனிதமானது அதை தாழ்த்தப்பட்டவர்கள் கற்கக் கூடாது என்று அவருக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அவையே அவரை பின்னாளில் தலித் இனத்தின் விடுதலைக்காகப் போராடத் தூண்டின.

டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். தன்னுடைய பதினேழாவது வயதில், பள்ளிப்படிப்பை முடித்த கையோடு ரமாபாயைத் திருமணம் செய்து கொண்டார். கல்வியில் மிக அதிக ஆர்வமும் திறமையும் கொண்டிருந்த அம்பேத்கார் 1912ல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக 24-9-1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே “புனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது.

இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். 1951-ம் ஆண்டு “இந்து சட்டத் தொகுப்பு மசோதா’ அறிமுகப்படுத்தப்பட்டபொழுது அதனை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். பல்வேறு நாடுகளில் கலாச்சாரங்களில் வாழ்ந்து இந்தியா திரும்பிய அம்பேத்கார் இந்தியா இன்னும் மாறாமல் இருப்பதைக் கண்டு வேதனையடைந்தார். தன்னுடைய பணி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளுக்காகப் போராடுவதே என்று முடிவெடுத்தார். தலித்களின் முன்னேற்றத்திற்காக என்ன செய்யலாம் என்பதை ஆழமாக சிந்திக்கத் துவங்கினார்.தான் பிறந்த மதத்தில் குறைந்தபட்ச மரியாதை கூடப் பெறமுடியாத நிலையில் தலித் சமூகம் இருப்பதைக் கண்டு இதயம் நொந்தார்.

உலக நாடுகள் தரும் மனித உரிமைகள் என்பவையெல்லாம் தாழ்த்தப்பட்ட மனிதனுக்கு இந்தியாவில் நிராகரிக்கப்படுவது கண்டு அம்பேத்கார் ஆவேசமடைந்தார்.சில மதவாதிகளின் சுயநல வளர்ச்சிக்காக கட்டப்பட்ட சாதீய அமைப்பு ஒழிந்தால் இந்தியா வலுப்பெறும் என்னும் சிந்தனை அம்பேத்காரிடம் நிறைந்திருந்தது. சிந்தனைகளோடு ஒடுங்கிக் கிடக்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில் சிந்தனைகளின் செயல்பாட்டுக்காக அயராது பாடுபட்டதால் இன்று அம்பேத்கர் உரிமைக் குரலின் பிரதிநிதியாக சித்தரிக்கப்படுகிறார்.தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் கைகளில் அரசியல் அதிகாரம் வருவதன் மூலம் மட்டுமே இந்தியாவில் இருக்கும் சாதீய அடக்குமுறையையும், சீரான வளர்ச்சியையும் அடைய முடியும் என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். எனவே தான் அவரால் காந்தியின் கொள்கைகளோடு பல நேரங்களில் ஒத்துப் போக நேர்ந்ததில்லை. காந்தி தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அல்ல, ஆதிக்க சாதியில் இருந்து கொண்டு ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைச் சீர்செய்து விட முடியாது என்று கருதினார் அம்பேத்கர்.தாழ்த்தப்பட்ட மக்களை ஹரிஜன் என்றும் கடவுளின் குழந்தை என்றும் காந்தியடிகள் பெயரிட்டழைத்ததை அம்பேத்கர் வெறுத்தார். தாழ்த்தப்பட்டவன் கடவுளின் குழந்தை எனில் உயர்ந்தவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் சாத்தானின் பிள்ளைகளா என்று குரல் எழுப்பினார். மேற்பார்வைக்கு விதண்டாவாதமாகத் தோன்றினாலும் அம்பேத்கரின் ஆழமான சிந்தனையே இந்த பதிலுக்குக் காரணம்.

கோயில்களில் அனாதைகளாய் விடப்படும் சிறுவர்களையே கடவுளின் குழந்தைகள் என்று அழைக்கும் வழக்கம் இருந்ததை அம்பேத்கர் அறியாதவர் அல்ல. குஜராத்தி எழுத்தாளர் நர்சி மேத்தா தன்னுடைய நாவலில் கடவுளின் குழந்தைகள் என்பவர்கள் தந்தை யார் என்பதை அறியாதவர்கள் என்று குறிப்பிடுவது இங்கே கவனிக்கத் தக்கது. எனவே தான் காந்தியடிகளின் பேச்சில் ஏதோ உள்நோக்கு இருப்பதாகக் கருதிய அம்பேத்கர் அதை எதிர்த்தார்.கற்பி, போராடு, ஒன்றுசேர்’ எனும் அம்பேத்காரின் முழக்கம் அவர் கல்வியின் பால் கொண்டிருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் கல்வியின் சாரலில் கூட நனைந்து விடாதபடி துரத்தப்பட்ட அன்றைய சூழலில், மாகாராஷ்டிராவில் வாழ்ந்த ஜோதிபா புலே தாழ்த்தப்பட்டவர்களுக்காக கல்வி நிறுவனங்கள் துவங்கிய நிகழ்ச்சியும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களின் பாகுபாடற்ற பார்வையும் அவரைக் கவர்ந்தன. கல்வி குறித்து அவர் விரிவாகப் பேசுவதற்கு இவை காரணிகளாக அமைந்தன.கல்வியைப் பரப்புவது, தலித் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவது, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது என தான் சார்ந்த சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும், எழுச்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தான் அம்பேத்கர். மத்திய அரசுப் பணிகளில் முதன் முதலாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க அம்பேத்கரின் தீவிர முயற்சியே காரணம்.1927 டிசம்பர் 25ம் நாள் மகாராஷ்டிராவின் மகத் குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தண்ணீர் எடுக்கும் உரிமை வேண்டும் என்று போராடினார் அம்பேத்கர். அவருடைய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள்.

மனுஸ்மிருதியை அவர் கொளுத்தி, மனுஸ்மிருதி என்பது சாதீய அடிப்படையில் மனிதனை அடிமைப்படுத்துகிறது என்று பிரச்சாரம் செய்தார்.தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களில் நுழையும் உரிமை பெறவேண்டும் என்பதற்காக அவர் நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தையும் நடத்தினார்.இந்தியாவில் தலித்கள் மட்டுமல்லாது, பெண்களும் ஒடுக்கப்படுவதை அம்பேத்கார் கடுமையாக எதிர்த்தார்.பெண்விடுதலைக்காகக்குரல்கொடுத்தார்.அம்பேத்கார் இன்று தலித் மக்களின் பிரதிநிதிபோல சித்தரிக்கப்படுவதனால் அவருடைய பல சிறப்புகள் பின்வரிசைக்குச் சென்றுவிடுகின்றன.அவர் ஒரு மிகச் சிறந்த பொருளாதார மேதை. அவர் மிகச் சிறந்த பேச்சாளர். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கார் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தார்.

இந்திய சுதந்திரத் தொழிலாளர் கட்சியை நிறுவியவர். கலிபோர்ணியா பல்கலைக் கழகத்தில் படித்தவர். ‘பிராப்ளம் ஆஃப் எ ருப்பீ’ என்னும் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றவர்.நுணுக்கமான சட்ட அறிவு பெற்றவர். மக்கள் நலனிலும், ஜனநாயகத்திலும் ஆழமான ஈடுபாடு கொண்டவர். அவர் மிகச் சிறந்த படிப்பாளியும் கூட. அவருடைய நூலகத்தில் சுமார் ஐம்பதாயிரம் புத்தகங்களைப் பாதுகாத்து வந்தார்.பகவத் கீதையையும், இராமாயணத்தையும் முழுமையாகப் படித்து அதைக் கேள்விக்குள்ளாக்கினார் அம்பேத்கார். ராமரும், கிருஷ்ணரும் வழிபாட்டுக்குரியவர்கள் அல்ல என்னும் அவருடைய முழக்கம் அவரை இந்து மத எதிர்ப்பாளராகச் சித்தரித்தது.‘பிறக்கும் போது தீண்டத்தகாதவனாகப் பிறந்தேன். இறக்கும் போது தீண்டத்தகாதவனாக இறக்க மாட்டேன். அதாகவது இந்துவாக இறக்கமாட்டேன்’ என்று பகிரங்கமாய் பிரச்சாரம் செய்து இந்து மதத்திலிருந்து விலகி சாஸ்திரங்களை வெறுத்த புத்தரின் மதத்தில் இணைந்தவர் அவர். அவருடைய எழுச்சி மிகுந்த பிரச்சாரம் பலரை இந்து மதத்திலிருந்து விலகி புத்தமதத்தையோ பிற மதங்களையோ தழுவினர் பலர். அம்பேத்கரின் இந்த முடிவு புத்தமதத்தின் எழுச்சிக்கு ஒரு மிகப் பெரிய காரணியாயிற்று.புத்தமதத்தைத் தழுவியபின் அரசியலிலிருந்து விடுபட்டார்.

அரசியல் சூழலில் நல்லவர்களுக்கு வேலையில்லை என்பது அவருடைய தீர்மானமாக மாறிவிட்டிருந்தது. அதன்பின் இலங்கை போன்ற நாடுகளுக்கு புத்தமத கலந்துரையாடல்களுக்காக அவர் பயணம் செய்தார்.டிசம்பர் ஆறாம் நாள் 1956, பாபாசாகேப் அம்பேத்கார், தலித் இன விடுதலைக்காய் கொழுந்துவிட்டெரிந்த விளக்கு சட்டென்று அணைந்தது. அவருடைய மறைவு தலித் விடுதலைப் போராட்டத்தின் வீரியத்தை வெகுவாகப் பாதித்தது.தாழ்த்தப்பட்டவர்களாக கருதப்படும் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க இன்று பல அரசியல் அமைப்புகளும், மனித நல அமைப்புகளும் தீவிரமாய இயங்கியும், இன்னும் அம்பேத்கரின் கனவு முழுமையடையவில்லை என்றே கொள்ளவேண்டியிருக்கிறது. அதற்கு மேல்வர்க்கம் என்று கருதிக்கொள்ளும் மக்களின் இறுகிய மனமே காரணியாகிறது.தலித் இயக்கங்களிடையேயும், தாழ்த்தப்பட்ட மக்களிடையேயும் இன்று பரவலாகக் காணப்படும் குழு மனப்பான்மையும் அம்பேத்கரின் கனவை உடைக்கிறது. சாதியின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக போராடிய அவர் தலித்களிடையே சாதீய, குழு மனப்பான்மை விரிவடைவதை நிச்சயம் அனுமதிக்க மாட்டார்.தமிழ் பேசும் அம்பேத்கார் திரைப்படத்திற்கு ரூபாய் பத்து இலட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது அம்பேத்கர் குறித்த சிந்தனைகள் எப்போதும் தமிழ் நெஞ்சங்களை விட்டு அகலாது என்பதற்கு ஒரு சான்று எனக் கொள்ளலாம்.

அம்பேத்கரின் நினைவு நாள் தலித் எழுச்சியின் தினமாக அல்லது தாழ்த்தப்பட்டதாகக் கருதப்படும் சமூகத்தினரின் விழிப்புணர்வாகக் கருதப்படுகிறது. அம்பேத்கரின் கனவுகளுக்குக் கால்முளைக்கும் நாளில் தான் மனித நேயத்துக்குச் சிறகுகள் முளைக்கும்.

அம்பேத்கர் கருத்துக்கள்

“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’

1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை

புத்தர் வாழ்க்கை வரலாறு

                                                           புத்தர்


புத்தர் (கி.மு.563-கி.மு.483)

இளவரசர் சித்தார்த்தர் எனும் இயற்பெயருடைய கௌதம் புத்தர் பெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவியவராவார். சித்தார்த்தர் வடகிழக்கு இந்தியாவில் நேப்பாள எல்லையின் அருகிலுள்ள கபில வஸ்து எனும் நகரை ஆண்டு வந்த மன்னரின் மைந்தர் (கௌதம குடும்பத்தையும் சாக்கிய குலத்தையும் சேர்ந்த) சித்தார்த்தர் இன்றைய நேப்பாள எல்லைக்குள்ளிருக்கும் லும்பினியில் கி.மு. 563 இல் பிறந்ததாகக் கூறப்படுகின்றது. அவர் தமது 16 ஆம் வயதில் ஒத்த வயதுள்ள உறவினளைத் திருமணம் செய்து கொண்டார். செல்வம் கொழிக்கும் அரண்மனையில் பிறந்த சித்தார்த்தர் இளவரசருக்கு இன்ப நலன்களுக்குக் குறைவில்லை. ஆயினும் அவர் ஆழ்ந்த அதிருப்தியடைந்திருந்தார். மனிதருள் பலர் ஏழையாக இருப்பதையும், தொடர்ந்து வறுமையில் துன்புறுவதையும், எல்லோரும் நோயுற்று இறுதியில் இறப்பதையும் கண்டார். மறைந்து போகும் இன்பங்களை விட மேலானாதொன்று வாழ்க்கையில் உண்டென்றும், அவற்றை எல்லாம் துன்பமும் இறப்பும் விரைவில் அழித்தொழிக்கும் என்றும் சித்தார்த்தர் கருதினார்.

கௌதமர் தமது 29 ஆம் வயதில் தம் மூத்த மகன் பிறந்ததும் தாம் வாழ்ந்து வந்த வாழ்கையை துறந்து உண்மையை நாடுவதில் முழு முயற்சியுடன் ஈடுபடத் தீர்மானித்தார். தம் மனைவி, மழலை மகன், உடமைகள் எல்லாம் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறி, கையில் காசின்றி அலைந்து திரிந்தார். சிறிது காலம் அவர் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த அறவோரிடம் பயின்றார். அவர்களுடைய போதனைகளை நன்கு கற்ற பின், மனித வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் காட்டிய வழி தமக்கு மன நிறைவளிக்கவில்லை யெனக் கண்டார். கடுமையான துறவே உண்மையான அறிவை அடையும் வழியென்று அப்போது பரவலாக நம்பப்பட்டு வந்தது. ஆகவே கௌதமரும் கடுந்துறவியாக முயன்று, பல ஆண்டுகளாக கடும் நோன்பையும், ஒறுத்தலையும் மேற் கொண்டார். ஆயினும் நாளடைவில் உடலை வருத்துவதால் உள்ளம் குழம்புவதையும் உண்மையான அறிவை அடைய இயலவில்லை என்பதையும் உணர்ந்தார். ஆகவே அவர் வழக்கம் போல் உண்டு, கடுந்துறவைக் கைவிட்டார்.

வாழ்க்கைப் பிரச்சினைக்களுக்குத் தீர்வு காண அவர் தனிமையில் கடுஞ் சிந்தனையில் ஆழ்ந்தார். இறுதியில் ஒரு நாள் மாலையில் அவர் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் அமர்ந்திருந்த போது, தம்மைக் குழப்பிய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைப்பது போல் அவருக்கு தோன்றியது. சித்தார்த்தர் இரவு முழுவதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். மறுநாள் காலையில் தாம் " அறவொளி பெற்ற " ஒரு புத்தர் என்றும் உறுதியாக உணர்ந்தார். அப்போது அவருக்கு 35 வயது. எஞ்சிய 45 ஆண்டுகளில் அவர் வட இந்தியா முழுவதும் சென்று கேட்க விரும்பிய அனைவருக்கும் தமது புதிய கோட்பாட்டைப் போதித்து வந்தார். கி.மு. 483 இல் அவர் இறப்பதற்குள் ஆயிரக்கணக்கான மக்களை மதம் மாற்றினார். அவர் கூறியவை எழுதப் பெறவில்லை யெனினும், அவருடைய சீடர்கள் அவர் போதனைகள் பலவற்றை மனப்பாடம் செய்திருந்தனர். அவை வாய்மொழி மூலமாகத் தலைமுறையாகப் பரவின.

புத்தரின் முக்கியப் போதனைகளைப் பௌத்தர்கள் " நான்கு உயர் உண்மைகள்" எனச் சுருக்கமாகக் கூறுவர். முதலாவது, மனித வாழ்க்கை இயல்பாகவே துயருடையது. இரண்டாவது, இத்துயரின் காரணம் மனிதனின் தன்னலமும் ஆசையுமாகும். மூன்றாவது, தனி மனிதன் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கிவிடலாம். எல்லா ஆசைகளும் ஆவல்களும் ஒழிந்த இறுதி நிலை (" அணைதல் அல்லது அவிதல்" எனப் பொருள்படும்) " நிர்வாணம்" எனப்படும். நான்காவது, தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் " எட்டு வகைப் பாதை" எனப்படும். அவை, நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான தியானம், பௌத்த சமயத்தில் இன வேறுபாடின்றி அனைவரும் சேரலாம். (இந்து சமயம் போலன்றி) இதில் சாதி வேறுபாடு இல்லை.

கௌதமர் இறந்த பின் கொஞ்ச காலம் இப்புதிய சமயம் மெதுவாகப் பரவியது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பெரும் இந்தியப் பேரரசரான அசோகர் பௌத்த சமயத்தை தழுவினார். அவரது ஆதரவினால் பௌத்த சமயச் செல்வாக்கும் போதனைகளும் இந்தியாவில் விரைவாகப் பரவியதுடன், பௌத்த சமயம் அண்டை நாடுகளுக்கும் பரவியது. தெற்கில் இலங்கையிலும், கிழக்கே பர்மாவிலும் பௌத்த சமயம் பரவியது. அங்கிருந்து அது தென்கிழக்கு ஆசியா முழுவதும், மலேசியாவிலும், இன்றைய இந்தோனேசியாவிலும் பரவியது. பௌத்த சமயம் வடக்கே திபெத்திலும், வடமேற்கில் ஆப்கானிஸ்தானிலும், மத்திய ஆசியாவிலும் பரவியது. அது சீனாவிலும் பரவியது. அங்கு ஏராளமான மக்கள் அதைத் தழுவினர். அங்கிருந்து அது கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் பரவியது.

இந்தியாவினுள் இப்புதிய சமயம் கி.பி. 500 - க்குப் பிறகு நலிவுறத் தொடங்கி, கி.பி. 1200 - க்குப் பிறகு ஏறக்குறைய முழுவதும் மறைந்து விட்டது. ஆனால் சீனாவிலும், ஜப்பானிலும் அது முக்கிய சமயமாக இருந்தது. திபெத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பல நூற்றாண்டுகளாக அது தலையாய சமயமாக இருந்து வந்துள்ளது. புத்தர் இறந்து பல நூற்றாண்டுகள் வரை அவருடைய போதனைகள் எழுதப் பெறவில்லை. ஆகவே இவரது இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்தது பௌத்த சமயத்தின் இரு முக்கிய கிளைகளுள் ஒன்று தேரவதா பிரிவு. இது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. இதுவே புத்தர் போதித்த போதனைகளுடன் நெருங்கிய தொடர்புடையதென மேல் நாட்டு அறிஞர் பலர் கருதுகின்றனர். மற்றொரு கிளை மகாயானம். இது பொதுவாக திபெத், சீனா, வட ஆசியாவில் செழித்தோங்கியது.

உலகப் பெரும் சமயங்களுள் ஒன்றை நிறுவியவரான புத்தர் இப்பட்டியலில் உயரிடம் பெற தகுதியுடையவர். 80 கோடி முஸ்லீம்களும், 100 கோடி கிறிஸ்தவர்களும் இருக்கும் இவ்வுலகில் 20 கோடி பௌத்தர்களே இருப்பதால், நபிகள் நாயகமும் கிறிஸ்து பெருமானும் கவர்ந்ததை விடக் குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களையே புத்தர் கவர்ந்தார் என்பது போல் தோன்றுகிறது. ஆயினும் எண்ணிக்கை வேறுபாட்டைக் கொண்டு நாம் தவறான முடிவுகளுக்கு வரலாகாது. பௌத்த சமயத்தின் கருத்துகளையும் கொள்கைகளையும இந்து சமயம் ஈர்த்துக் கொண்டது. பௌத்த சமயம் இந்தியாவில் மறைந்ததற்கு அது ஒரு காரணமாகும். சீனாவில் கூட தம்மை பௌத்தர்களெனக் கருதாதவர் பலரை பௌத்தக் கோட்பாடுகள் கவர்ந்துள்ளன.

கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களை விட பௌத்த சமயம் பெரும் அமைதி இயல்புடையது. இன்னா செய்யாமைக் கொள்கை பௌத்த சமய நாடுகளில் அரசியல் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கிறிஸ்து பெருமான் திரும்பவும் உலகிற்கு வருவாரானால் தமது பெயரால் நடைபெறும் பலவற்றைக் கண்டு அதிர்ச்சியடைவரெனவும், அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் வெவ்வேறு பிரிவினரிடையே நிகழும் கொடிய போராட்டங்களைப் பார்த்துத் திகிலடைவாரெனவும் பலமுறை சொல்லப் படுகின்றது. புத்தரும் பௌத்தக் கோட்பாடுகளெனக் கூறப்படும் பல கோட்பாடுகளைக் கண்டு வியப்படைவாரென்பதில் ஐயமில்லை. ஆனால் பௌத்த சமயத்தில் பல கிளைகள் இருப்பினும், இக்கிளைகளிடையே பெரும் வேறுபாடுகள் இருப்பினும், கிறிஸ்துவ ஐரோப்பாவில் நிகழ்ந்தவை போன்ற கொடிய சமயப் போர்கள் பௌத்த வரலாற்றில் நிகழ்ந்ததில்லை. இதைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவின் போதனைகள் அவரைப் பின்பற்றியவரிடையே மிகுதியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது போல் தோன்றுகிறது. புத்தரும் கன்ஃபூசியஸிம் உலகை ஏறக்குறைய ஒரேயளவில் கவர்ந்துள்ளனர். இருவரும் ஏறக்குறைய ஒரே காலத்தில் வாழ்ந்தனர். அவர்களைப் பின்பற்றியவர்களின் தொகையும் மிகுதியாக வேறுபடவில்லை. நான் புத்தரைக் கன்ஃபூசியஸிக்கு முன்னால் வைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, சீனாவில் பொதுவுடமைக் கொள்கை தோன்றியதிலிருந்து கன்ஃபூசியஸின் செல்வாக்கு மிகவும் குறைந்து விட்டது. வருங்காலத்தில் கன்ஃபூசியஸின் கருத்துகளை விட புத்தரின் கொள்கைகளே மிக முக்கியமாகக் கருதப்படுமெனத் தெரிகின்றது. இரண்டாவது, கன்ஃபூசியக் கோட்பாடு சீனாவிற்கு வெளியே பரவவில்லை என்பது முந்திய சீன மனப்பாங்கில் கன்ஃபூசியஸின் கருத்துகள் எவ்வளவு மெதுவாகப் பதிந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. ஆனால் புத்தரின் போதனைகளோ முந்திய இந்தியக் கோட்பாட்டைத் திரும்பக் கூறுவதாக அமையவில்லை. கௌதம புத்தரின் கருத்துகள் புதுமையாக இருந்தாலும், அவருடைய கோட்பாடு பலரைக் கவர்ந்ததாலும், பௌத்த சமயம் இந்திய எல்லையைக் கடந்து மிகத் தொலைவில் பரவியது.

மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு


அரிது அரிது மானிடராதல் அரிது. அதனினும் கூன் குருடுசெவிடு நீங்கிப் பிறத்தல் அரிது என்பதோடு மட்டும் ஒளவை தனது பாடலை நிறுத்திவிட்டார்.

வளர்ந்து வரும் மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும், எடுக்கவும் கொடுக்கவும் கூடிய சமுதாய அமைப்பை இப்பொழுது பெற்று வருகிறோம். எனவே தானமும் தவமும்கூட எந்த ஒரு விதத்திலாவது செய்துவிட முடியும்.

இத்தனைக்க மேல் ஒருவன் கவிஞனாகப் பிறக்கிறான் என்றால் அது எத்தனையோ நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்ச்சி என்றுதான் கூறமுடியும். கம்பனுக்குப் பின் தமிழ் மக்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று வரும் கவிஞர் சுப்ரமணிய பாரதியார் ஒருவரே.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு எத்தனையோ தேசியத் தலைவர்களைப் பெற்றெடுத்த பெருமை உண்டு. வ.உசி. சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன் போன்றவர்கள் அதே மாவட்டத்தில் பிறந்தவர்கள். எட்டையபுரத்தில் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி சின்னச்சாமி அய்யருக்கும் லெட்சுமி அம்மாளுக்கும் பிறந்த குழந்தைதான் நமது சுப்ரமணிய பாரதியார்.
அவர் இளமையிலேயே கவிபாடக்கூடிய திறமை பெற்றிருந்தார். பதினொரு வயது நிரம்பிய சுப்பையா என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவரை எட்டையபுரம் சமஸ்தானப் புலவர்கள் பற்பல சோதனைக்கு உட்படுத்தினர். அவைகளில் வெற்றி பெற்றதால் அந்தப் புலவர்கள் வியந்து அளித்த பட்டம் 'பாரதி'.
அவர் 1894-1897 வரை திருநெல்வேலி ஹிந்துகல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை படித்தார். படிக்கும் போதே தமிழ்ப் பண்டிதர்களுடன் ஏற்பட்ட சொற்போர் காரணமாக 14 வயதிலேயே அக்கால வழக்கப்படி திருமணம் நடந்தது. 7 வயது நிரம்பிய செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
1898-1902 வரை காசியில் தனது அத்தை குப்பம்மாள் அவர்களுடன் தங்கியிருந்தார். அப்போது அலகாபாத் சர்வகலாசாலையில் பிரவேசத் தேர்வு எழுதி வெற்றிப்பெற்றார். காசி இந்து சர்வகலாசாலையில் ஹிந்தியும், வடமொழியும் பயின்றார். அப்போதுதான் நமது பாரதியாருக்கு தலைப்பாகை கட்டும் பழக்கமும் மீசை வைத்துக் கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டதாக அறிகிறோம். மீண்டும் எட்டையபுரம் வந்து 1902 முதல் இரண்டாண்டு காலத்திற்கு எட்டையபுரம் மன்னருக்குத் தோழனாக இருந்தார். அப்போதுதான் மதுரையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'விவேக பானு' என்ற பத்திரிகையில் இவரது முதல் பாடல் 'தனிமை இரக்கம்' அச்சாகி வெளியிடப்பட்டது.
1904ம் ஆண்டு மதுரையில் உள்ள சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அதே ஆண்டு நவம்பரில் சென்னையிலிருந்து வெளிவரும் 'சுதேசமித்திரன்' பத்திரிகைக்கு உதவியாசிரியரானார். பின்பு 'சக்கர வர்த்தினி' என்ற பத்திரிகையின் ஆசிரியராக ஆனார்.

1905ம் ஆண்டில் பாரதியார் அரசியலில் ஈடுபட்டு இருந்தார். தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார்.

1906ல் சென்னையிலிந்து 'இந்தியா' என்ற வாரப் பத்திரிகை துவங்கி அதன் மூலம் தனது அரசியல் கருத்துக்களை இந்நாட்டு மக்களிடம் பரப்பினார். அப்போது திருமலாச் சாரியார். வ.உ.சி. சர்க்கரைச் செட்டியார் முதலியோரின் நட்புக் கிடைத்தது.

சூரத் காங்கிரசில் தீவிரவாதிகளுக்கும் மிதவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் 1907ல் பிளவு ஏற்பட்டது. பாரதியார், திலகர் போன்ற தீவிரவாதிகள் பக்கம் நின்று பணியாற்றினார். அப்போது திலகர், லாலா லஜபதிராய், அரவிந்தர் முதலியோரைச் சந்தித்தார். கிருஷ்ணசாமி அய்யர் என்ற தேசபக்தர் பாரதியாரின் பாடல்களில் உள்ள வேகத்தின் தன்மையை உணர்ந்து 'சதேசகீதங்கள்' என்ற தலைப்பில் அவரது பாடல்கள் பலவற்றை அச்சிட்டு இலவசமாக விநியோகித்தார்.

1908ஆண்டு 'சுயராஜ்ஜிய தினம்' சென்னையிலும் தூத்துக்குடியிலும் கொண்டாடப்பட்டது. அதில் வ.உ.சி சுப்ரமணியசிவா போன்றவர்களுக்குச் சிறைத்தண்டனை கிடைத்தது. அந்த வழக்கில் பாரதியார் சாட்சியம் சொல்லியுள்ளார்.
அதே ஆண்டில் கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் வெளியிட்ட 'சுதேச கீதங்கள்' என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பு ஒன்றை பாரதியார் வெளியிட்டார்.

இது வெளிவந்தபின், பிரிட்டிஷ் அரசாங்கம் பாரதியார் மீது ஒரு கண்ணோட்டம் விட்டது. 'இந்தியா' பத்திரிகையின் சட்ட ரீதியான ஆசிரியர் கைது செய்யப்பட்டு பாரதியார் மீது வாரண்ட் போட்டது. பாரதியார் தலைமறைவானார். புதுச்சேரி சென்றார். அங்கும் போலீஸ் தொல்லைகளுக்கு உட்பட்டார்.

அப்போது 'இந்தியா' பத்திரிகை 1910 வரை புதுச்சேரியிலிருந்து தனது தேசியத் தொண்டைத் துவங்கியது. எரிமலை வெடித்தது போன்ற எழுத்துக்களால் மக்களிடையே விடுதலை வேட்கையைப் பரப்பினார். இதனைக் கண்ட பிரிட்டிஷார் இந்தியா' பத்திரிகை வருவதைத் தடுத்தது. அத்துடன் பத்திரிகை, விற்பனைக் குறைவால் நின்று போயிற்று.

1911ல் மணியாச்சியில் கலெக்டர் ஆஷ்துரை சுட்டுக்கொல்லப்பட்ட போது புதுச்சேரியில் உள்ள தேசபக்தர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அங்கு உள்ள தேசபக்தர்களுக்குத் தாங் கொணாத் துன்பத்தை ஆட்சியினர் கொடுத்தனர். மேலும் அவர்களை அங்கிருந்த வெளியேற்றவும் முயற்சிகள் நடைபெற்றன. பாரதியாரின் சீடர்கள் ஏராளமாயினர்.

பாரதியார் 1912-ல் கீதையை மொழி பெயர்த்தார். மேலும் கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்கள் எழுதப் பெற்றன. பாஞ்சாலி சபதம் வெளியிடப் பெற்றதும் இந்த ஆண்டில்தான்.

அடுத்த ஆண்டில் 'ஞானபாநு' என்ற பத்திரிகைக்குச் செய்திகள் சேகரித்துக் கொண்டிருந்தார். 1914ல் முதல் உலகப் போர் துவங்கியதும் அங்கு உள்ள தேசபக்தர்களுக்கு ஏராளமான தொல்லைகள் ஏற்பட்டன.

பரலி சு. நெல்லையப்பர் அவர்கள் 1917ல் கண்ணன் பாட்டு முதற்பதிப்பைச் சென்னையில் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து 1918ல் 'சுதேச கீதங்கள்', 'நாட்டு பாடல்' முதலியன வெளியிடப்பட்டன.

புதுச்சேரி வாழ்க்கையில் ஏற்பட்ட சலிப்பு உணர்வால் பாரதியார் 1918ம் ஆண்டு நவம்பர் 20ந் தேதி அங்கிருந்து வெளியேறினார். அப்போது கடலூருக்கு அருகே கைது செய்யப்பட்டு, சில நாட்கள் சிறை இருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானவுடன் கடையத்துக்குச் சென்றார்.

1918 முதல் 1920 வரை கடையத்தில் வாழ்ந்து வந்த பாரதியார் எட்டையபுர மன்னனுக்கு சீட்டுக் கவிகள் மூலம் தன் நிலைமையைச் சொல்லியும் எவ்விதப் பயனும் ஏற்படாமல் சென்னைக்கு வந்தார். சென்னையில் ராஜாஜி அவர்கள் வீட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார்.

1920ல் மீண்டும் சுதேசிமித்திரனுக்கு உதவியாசிரியரானார். பாரதியாரின் எழுத்துக்கள் அப்போது அதில் நிறைய இடம் பெற்றன.

1921ல் திருவல்லிகேணியில் கோயில் யானை ஒன்றால் தூக்கி எறியப்பட்டு, அதிர்ச்சியுற்று, நோய்வாய்ப்பட்டு 1921 செப்டம்பர் 11ம் தேதி நள்ளிரவுக்குப் பின் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றார். உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்ற பாரதியார், உலக மக்களின் உள்ளங்களிடையே இன்னும் வாழ்ந்து வருகிறார். வாழ்க மகாகவி பாரதியார்.

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes